Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Jul 4, 2011

திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும்


ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை அப்படின்னு ஒரு தமிழ் பாட்டு இருக்கு. ஒரு வார்த்தை நயத்திற்காக அந்த கவிஞர் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனா ஆசையை மூணு வகையாக பிரிச்சிருக்காங்க நம் முன்னோர்கள்.

பொன்னாசை
பெண்ணாசை 
மண்ணாசை.

பொன்னாசை பெண்களுக்கும், 
பெண்ணாசை ஆண்களுக்கும், 
மண்ணாசை இரு பாலருக்கும் 

என்று அம்முன்னோர்கள் பிரித்திருக்கலாம்.. 


என்னை கேட்டால் அந்த முன்னோர்கள் எனப்படுபவர்கள் ஆண்களாய் மட்டுமே இருந்திருப்பார்கள் என்பேன். இங்கு ஆணாசை என்பது வகைப்படுத்தப் படவில்லை. பெண்களுக்கு ஏன் ஆணாசை இருக்காதா? அல்லது இருக்ககூடாதா?

சாலையோரம் ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இப்படியெல்லாம் சிந்தித்து கொண்டிருக்கும் என்னை ஒரு பெண் என்றும், பெண்ணியவாதி என்றும் நீங்கள் நினைத்தால், மன்னித்து தொடரவும். நான் ஒரு செயின் பறிக்கும் திருடன். செயின் பறிப்பு எனது பொழுதுபோக்கு அல்ல என் பொழப்பு. இதுவரை நான் நிறைய செயின் பறிப்புகள் செய்திருக்கிறேன். அந்த கடவுள் புண்ணியத்தில் இதுநாள் வரை போலிஸ் திருடர்களிடம் மாட்டியதில்லை. கடவுளின் அருள் எனக்கு அதிகமாய் இருப்பதாய் நம்பிக் கொண்டிருக்கிறேன். 

அப்போது ஒரு சுமாரான இளம் பெண்ணும் அவளது தாயாரும் என் அருகில் வந்து நின்றார்கள். அந்த இளம் பெண்ணின் கழுத்தில், தமிழ் புராண சீரியலில் வரும் பெண் தெய்வத்தைப் போல ஏராளமான நகைகள் பளபளவென மின்னியது. என் கண்ணை கூசியது.

"ஒருவேளை உண்மையான தெய்வமே வந்து நம்மை சோதனை செய்கிறதோ?" என்ற எண்ணம் கூட என் மனதில்.

"அடச்சீய்! கடவுள் தான் நம்ம பக்கம் இருக்கிறாரே!"

என் கைகளும் மனமும் பரபரவென அலைந்தது. நகத்தை வெறிகொண்டு கடிக்க ஆரம்பித்தேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஸ்டைலாக டிரஸ் செய்த ஒரு இளைஞன் இருந்தான். காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு, தலையை லேசாய் ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் ஐ.டி துறையில் வேலை செய்து கொண்டிருக்கலாம். அவனும் அந்த பெண்ணின் கழுத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நகைகளை பறிக்கும் ஆசை அவனுக்குள்ளும் வந்திருக்கலாம். 

"எப்படி செயல்படுத்துவது?" என்ற திட்டத்தை ஒரு முறை மனதிற்குள் ஓட விட்டேன். நகையை பறித்தவுடன் ஓட வேண்டிய பாதையையும் தீர்மானித்தேன். நன்கு மூச்சை இழுத்துக் கொண்டேன். 

மெல்ல அவளை நோக்கி நகர முற்பட்ட போது தான், கோரஸாய் அந்த சத்தம் கேட்டது. 

"புடிங்க புடிங்க"
"செயின புடுங்கிட்டு ஓடுறான், அவன புடிங்க" 

சடாலென்று ஒருவன் என்னை தாண்டி வெகுவேகமாய் ஓடிக் கொண்டிருக்க, பின்னால் ஒரு கூட்டமே ஓடி கொண்டிருந்தது. அந்த நொடி என் சகலத் திட்டமும் மாயமாய் மறைந்து போனது. பரீட்சை ஹாலில் ஆசிரியர் பக்கத்தில் வந்து நிற்க, எல்லா பதிலும் மறந்து போனது போல ஆனது. 

நானும் கூட்டத்தோடு கூட்டமாக பின்னே ஓடினேன். அந்த சமயத்தில் "மொழி" திரைப்படத்தில் வரும் ஜோதிகாவைப் போல எங்கிருந்தோ வந்த ஒரு பெண் எம்பி பாய்ந்து அவன் காலைப் பற்றினாள். அவன் தடாலென்று தலைக் குப்புற விழுந்தான். அவள் வேகமாய் எழுந்து அவன் தலை முடியைப் பற்றி பளீர்! பளீர்! என அவன் கன்னத்தில் அறைந்து கொண்டே இருந்தாள். அவள் ஒரு கன்னத்தில் அடிக்க, அவன் மறு கன்னத்தை காட்டிக் கொண்டிருந்தான். வலியை தாங்கவே அவ்வாறு செய்தான். 

அவளை பார்க்கும் போது ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் பார்த்த, ஜான்சி ராணியை போலவே எனக்கு காட்சி தந்தாள். குதிரையும் கூர்வாலும் மட்டுமே மிஸ்ஸிங்.

அவளோடு சேர்ந்து கூட்டமாய் வந்த எல்லோரும் அவன் மேல் ஏறி மிதி மிதியென மிதித்தார்கள். இப்போது கூட்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.  ஒரு சில இடங்களில் மற்றவர்களிடம் அடிவாங்கி தப்பித்து இருக்கிறேன். ஆனால் யாரையும் இதுவரை அடித்ததில்லை. அதனால் யாரையாவது பயங்கர வெறியுடன் அடிக்கும் ஆவல் என் உள் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஆவல் வரும் போதெல்லாம் என்னிடம், சுவர் மட்டுமே மாட்டும். இப்போது ஒருவன் அகப்பட்டுள்ளான். இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பமும் இனி கிடைக்காது.

கூட்டத்தை தள்ளி முட்டி கொண்டு உள்ளே சென்றேன். அவன் இப்போது மல்லாக்க போடப் பட்டிருந்தான். என் ஆசை நிறைவேறப் போகிறது. என்னால் முடிந்த பலம் கொண்ட மட்டும் இழுத்து அவன் வயிற்றில் குத்தினேன். குத்த குத்த "அஆவேன்று" அலறிக் கொண்டே இருந்தான். எல்லோரும் அடித்து கொண்டே இருக்க, சில குத்துக்கள் குத்திய பின்பு நான் நகர்ந்தேன். வெளியே வரும்போது தான் பார்த்தேன் அந்த கூட்டத்தில் அவனை தொடர்ந்து உதைத்துக் கொண்டிருந்தார்கள் என் தொழில் எதிரிகளான கருப்பனும், வெள்ளையம்மாவும்.

என் ஆசை தீர்ந்து வெளியே வரும் போது, சுற்றி இருந்த மக்கள் ஜான்சி ராணிக்கு அடுத்து என்னையும் ஒரு வீரனாகவும் உத்தமனாகவும் பார்த்த பார்வை, நான் ஒரு நல்லவனாக என்னையே நினைக்கச் செய்தது. ஆனால் அவன் பாக்கெட்டில் இருந்து நான் சுட்ட, ஒரு தாலி கொடி மட்டும் லேசாய் என் தொடையை உறுத்தியது. 

கதை நீதி : திருடன் பிடிபட்டான், திருடர்கள் பிடிபடவில்லை.