Jan 5, 2018

அம்மாபிள்ளை அர்னால்டு
அமெரிக்க மாகாணத்தின் அம்மா பேரவையின் தலைவர் அர்னால்டு எந்திரன் 1.0 வெளியீட்டுக்கு வந்து அம்மாவுடன் அன்பு குலாவி நலம் விசாரித்து விட்டு சென்றார். இப்போது 2.0 ரிலீசுக்கு வந்தவர் அம்மாவை காண ஏர்போர்ட்டில் இருந்து நேராக போயஸ்கார்டானுக்கு வண்டியை விடுகிறார். ஆள் அரவம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கும் கார்டனை பார்த்தவுடன் லேசாக அதிர்ச்சி அடைகிறார். அம்மாவின் அன்பு மகன் அர்னால்டுக்கு வந்ததை கண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் பம்மிக்கொண்டே ஓடி வருகின்றனர். உள்ளே நுழைந்ததும் அம்மாவின் உருவ படத்துக்கு மாலை போட்டதை பார்த்த டெர்மினேட்டரின் இரும்பு இதயம் நொறுங்குகிறது. "டேய் என்னடா போட்டோவை வச்சிருக்கீங்க? அம்மாவை என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க, "சின்னம்மா நம்ம அம்மாவை ஆக்சிஜன் கொடுக்காம கொன்னுட்டா. அம்மாவை கொண்டு போய் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாச்சு" என்றனர் இருவரும் கோரஸாக. "யாரை கேட்டு கொண்டு போனீங்க, அம்மாவோட கால பிடிச்சு ஒரு தடவையாச்சும் அழுத்திருப்பனே" என்று கதற "கால கூட விட்டு வைக்கல பாவி பசங்க" என்று துண்டை வாயில் வைத்து கொண்டு அழுதனர். "அதுவரைக்கும் நீங்க என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க எல்லோரும் மௌனமாக நின்றனர். ஆத்திரம் அடைந்த அர்னால்டு டெர்மினேட்டரில் பயன்படுத்திய பெரிய கன்னை ஓபிஎஸ்இன் திருநீறுக்கு நடுவில் உள்ள சிகப்பு பொட்டில் வைத்து மிரட்டி கேட்டார். அப்போது "நான் தர்ம யுத்தம் செய்தேன்" என ஓபிஎஸ் உளற, "நான் காபியில் மிக்ஸர் போட்டு சாப்பிட்டேன்" என்று சொல்லி ஈபிஎஸ் சிரிக்க, "அம்மா இட்லி சாப்பிட்டதா பொய் சொன்னோம்" என திண்டுக்கல் சீனிவாசனும், "வெளியில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம்" என ஜெயகுமாரும் ஒவ்வொருவராய் உண்மையை ஒப்பு கொண்டு காலில் விழுந்தனர்.

இவர்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என மெரினா பீச்சுக்கு புறப்பட்டு போய் எம்ஜியார் சமாதியை கட்டி புரண்டு அழுகிறார் அர்னால்டு. தினகரன் பின்னே சென்று தோளை தட்டி, "தம்பி, இவரும் உங்க ரிலேஷன் தான், ஆனா உங்க அம்மா சமாதி அங்க இருக்கு பாரு" என்று கை காட்ட, எம்ஜியார் சமாதியிலேயே எல்லா எமோஷனையும் கொட்டி தீர்த்ததால், அம்மா சமாதிக்கு சென்று வாய் திறக்கும் போதும் நா வறண்டு விட்டது. என்ன இருந்தாலும் ஹாலிவுட் ஹீரோ அல்லவா? துரைசிங்கத்தை போல எதிரிகளிடம் நாக்கு வரலாமல் பேச முடியாது. அதிலும் அர்னால்டு, அவர் படத்திலியே அதிகம் பேச மாட்டார். அந்த நேரம் "இந்தாங்க இத குடிங்க" என்று ஒரு ஆண் குரல் கேட்க, அங்கே சுருதி ஹாசன் ஒரு பேண்டா பாட்டிலை நீட்டுகிறார். அதை வாங்கி குடித்தவர் கொண்டு வந்த கன்னை சமாதியின் மேல் வைத்து விட்டு "அதிமுக கட்சியை காப்பாற்றி, அம்மாவை கொன்ற தீய சக்திகளை பழி வாங்கி தீருவேன்" என்று ஓங்கி மூன்று முறை அடித்து சபதம் போட்டு விட்டு சமாதியை கவனிக்கிறார். ஆங்காங்கே நிறைய விரிசல்களுடன் காண படுகிறது சமாதி. வெகுண்டெழுந்த அர்னால்டு "பிக்காளி பசங்களா, அம்மாவுக்கு சமாதி கட்றதுல கூட ஊழல் பண்ணீட்டீங்களேடா?" என்று சொல்லி கொண்டே கன்னை எடுத்து அனைவரையும் சுட போக, பதறியபடி அவர் காலில் விழுந்த அவர்கள் "அது சின்னம்மா போட்ட சாபத்தால் உடைஞ்சது" என்று தெரிவிக்கின்றனர். "சரி, ஏண்டா எதுக்கெடுத்தாலும் கால்ல விழறீங்க" என கேட்க, "ஓல்ட் ஹேபிட் ஆர் டை ஹார்ட்" என பன்னீர் பட்டர் ஆங்கிலத்தில் பேசுகிறார். "ஒரு பொம்பள சபதம் போட்டு இப்படி தரையை ஒடச்சுருக்கா, நம்மளாலேயே உடைக்க முடியலை. அப்போ எவ்ளோ பெரிய வில்லியா இருப்பா?" என உள்ளுக்குள் சின்னம்மாவை நினைத்து லேசாக உதறல் எடுக்கிறது அர்னால்ட்டுக்கு. டெர்மினேட்டரின் முதல் பாகத்தில் வரும் வில்லியின் மறுஉருவமாக சின்னம்மா இருக்கலாமோ என யோசித்தபடி எந்திரன் ரிலீஸ் பங்க்சனுக்கு நடையை கட்டுகிறார். ஆனாலும் அவர் மனதில் ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டே இருந்தது.

"அப்போ அந்த இட்லியை சாப்பிட்டது யாரா இருக்கும்?"


2 comments:

Stefan Forge said...


If you wish for to increase your experience just keep visiting this web site and be updated with the most up-to-date information posted here. paypal.com login

Ramesh Ramar said...

Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News