Jan 5, 2018

வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நல்ல கேரக்டரில் நடித்த முதல் படம். வழக்கமாய் ஊதாரியாய், வேலைவெட்டியின்றி பெண்கள் பின்னால் அலைந்து மிரட்டி காதலிக்க வைக்கும் கேரக்டரிலேயே பார்த்து பழகிய நமக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாய் தான் இருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது போல நடித்து போரடித்திருக்கும். படம் இடைவேளை வரை நன்றாக தான் போகிறது. அதிலும் குப்பத்து ரவுடியிசத்தை கலாய்ப்பதெல்லாம் அதகளம். இது போல படத்திற்கு அளவான காதல் காட்சிகள். இடைவேளைக்கு பிறகான காட்சிகள் விமல் சொல்வது போல "இதெல்லாம் நம்பர மாதிரியாங்க இருக்கு?" என்பது போல் தான் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் சொன்ன கான்செப்ட் அருமை. பணத்துக்காக தன் கம்பெனி செய்யும் தவறு எவ்வாறு நம் சுற்றத்தை பாதிக்கும், ஒவ்வொரு வேலைக்காரனும் அதை தடுக்க முடியவில்லை என்றாலும் அதை பற்றி வெளியில் புரணியாவது பேசலாம் என சொல்வது சிறப்பு.

அதையே நம் குடும்பத்திற்குள்ளும் எடுத்து கொள்ளலாம். ஊழல் செய்தோ லஞ்சம் வாங்கியோ சம்பாரிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் கேள்வி கேட்டு திருத்தினாலே பெரிய மாற்றங்கள் நடக்கும். நம் நாட்டில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம் அதை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எதையும் கேட்காமல் அந்த பணத்தில் உண்டு கொழுத்து வாழ்ந்து வருவது தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தவறு செய்பவனுக்கும் குற்ற உணர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை. ஊரில் கெத்தாக வலம் வருகிறான். தவறு செய்பவனை கூட மன்னித்து விடலாம். இவர்கள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் முழு முதற் காரணம். "நீ தவறு செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்க்கையை நடத்த மாட்டோம்" என குடும்ப உறுப்பினர்கள் போராடினாலே அவன் திருந்தி விடுவான். குடும்பம் தான் வேர். அங்கே பிரச்னை சரியானால் மற்ற இடங்களில் தானாக தீரும். படத்தில் இதை பற்றி ஆழமாக பேசியிருந்தால் மிக சிறப்பாய் இருந்திருக்கும்.

கன்ஸயுமரிசத்தில் முழுகி உழலும் சிட்டி மக்கள் இந்த படத்தை பார்க்க, அவர்கள் வாங்கி வந்த ஒரு அடி பாப்கார்ன் பாக்கெட், கூல்ட்ரிங்ஸ் இதெல்லாம் தியேட்டரில் சாப்பிட்டு ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாய்தானிருக்கும்.

இடைவேளையில் ஐஸ்க்ரீம் கேட்ட குழந்தைகளுக்கு, பெற்றவர்கள் "இப்போ தான் படம் பார்த்த. அதுல பாய்சன் இருக்காம்" என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார்கள்.

படம் ஊரில் உள்ள லோக்கல் தியேட்டரில் தான் பார்த்தேன். கண்ட கண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லை. டிக்கெட் கூட ஐந்து நிமிடத்திற்கு முன் வாங்கினால் போதும். நிம்மதியாய் படம் பார்க்கலாம். மல்டிப்ளெக்ஸில் கிடைக்காத திருப்தி கிடைக்கிறது


No comments: