Dec 22, 2011

மௌன குரு - நமீதா விமர்சனம்.

தொடர்ந்து மொக்கை படங்களை பார்த்து அவ்வப்போது என் கண்ணிலும் காதிலும் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்து விடுவேன் என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால் இந்த படம் வந்து என் உயிரை காப்பாற்றி இருக்கிறது. "வாகை சூட வா" படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம். இந்த படத்திற்கு நிறைய பேர் விமர்சனம் எழுதாமல் இருந்ததில் இருந்தே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று யூகித்தது மிக சரியாக இருந்தது.படம் பார்க்க பார்க்க எனக்கு அடக்க முடியாத சந்தோசம். ஒரு தமிழ் படம் இந்த அளவுக்கு திரைக்கதை செதுக்கப் பட்டு, அருமையான எடிட்டிங்கில், நீட்டான வசனத்தோடு இருப்பதை என்னால் சிறிது நேரம் நம்பவே முடியவில்லை.

இயக்குனர் இதை வேறு எங்கும் இருந்து உருவியில்லாமல் இருந்தால் அவரை இனி நாம் அதிகமாகவே நம்பலாம்.

நம்ம ஊர் போலீஸ்காரர்களின் டவுசர்களை அழகாய் கழட்டி அம்மணமாய் ஓட வைக்கிறார்கள். தள்ளு வண்டிகாரர்களிடம் காசு பிடுங்கும் எந்த ஒரு போலீஸ்காரனும் குடும்பத்துடன் இந்த படத்திற்கு போனால் அவமானப்பட்டு (சீட்டை விட்டு எழுத்து) நிற்க வேண்டும். போலீசை கவுரவப் படுத்துகிறேன் பேர்வழி என்று உண்மைக்கு புறம்பாக, "சாமி", "சிங்கம்" என்று எடுத்து ஊரை ஏமாற்றும் இயக்குனர்கள் தங்கள் உதவியக்குனர்கள் குழுவோடு சென்று கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

படம் என்பது படமாக மட்டுமே இருக்க வேண்டும். படத்தில் படம் பார்க்கும் மக்களுக்கு சீரியஸாக பேசி அட்வைஸ் பண்ணுவது போல வசனங்கள் வைப்பது போல் இருந்தால் அது ஸ்டேஜ் டிராமா போலாகிவிடும். இதை மந்திரப்புன்னகை கருபழனியப்பனும், போராளி சசிகுமாரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்லவேளை இவர்கள் படத்தில் அந்த அட்வைஸ் செய்யும் கேரக்டர்கள் கேமராவை நேராய் பார்த்து பேசவில்லை. எவனும் படம் பார்த்து திருந்த வருவதில்லை. எந்த ஒரு விசயத்தையும் ஒரு கேரக்டர் மூலம் அதனை அசிங்கப் படுத்தி காட்டுவதன் மூலமே மண்டையில் நங்கென்று உரைக்கச் செய்ய முடியும். உதாரணமாக இந்த படத்தில் பரோட்டா கடைக்காரனிடம் எவ்வளவு காசு மாமுல் வாங்குவது என்று அந்த போலிஸ்காரனை பற்றி அந்த பைத்தியக்காரன் பேசும் வசனம்.

இந்த நாயகன் கேரக்டருக்கு என்னால் வேறு எந்த முன்னணி நாயகனையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராஜபாட்டை ட்ரைலரில் வரும் விக்ரமை போல முஷ்டியை முறுக்கி நீண்ட தலைமுடி கொண்ட கறுப்பு நிற தடி வில்லனை அடித்து, ஆகாயம் வரை பறக்க வைத்து அவனுக்கு சிட்டி view காண்பிப்பது, துப்பாக்கி லைசன்ஸ் பொதுமக்களுக்கு கொடுக்கப் படாத இந்த நாட்டில், துப்பாக்கியை விரலால் சுழட்டி சுழட்டி அனாயசமாக வில்லன்களை குறி தவறாமல் சுட்டு சுடுகாட்டுக்கு அனுப்புவது போன்ற எந்த அக்மார்க் தமிழ் ஹீரோயிசத்தனமும் இல்லாமல், உண்மையான ஹீரோசியம் காட்ட வைக்கிறார் இயக்குனர்.

இவர் எப்போதும் இயக்குனர்களின் நாயகனாக இருக்கும் வரை இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தனி ஹீரோயிசம் பண்ண ஆசைப்பட்டால், அவர் தாத்தாவுக்கு ஆனது போல ஜாதகத்தில் கெட்ட காலம் ஆரம்பித்து விடும்.

நாயகனுக்கும் அவருடைய அம்மாவுக்குமான காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்கள் அருமை. மகனின் பிள்ளைக்கு பீத்துணி கழுவ தான் உன்னை கூப்பிடுகிறான் என்று பேசும் வசனங்கள் வெளியூரில் இருந்து கொண்டு (பாசமாய்) அம்மாவை அழைக்கும் எல்லா மகன்களுக்கும் சுடும். அண்ணனின் சிடு சிடு மனைவியின் கேரக்டர் தமிழ் சீரியலை சிறிது ஞாபகப் படுத்தினாலும் திரைக் கதைக்கு நிறையவே பலம்.நாயகி "இனியா". இவருக்காகத்தான் இந்த படத்திற்கே போனேன். இவரைப் பற்றி சொல்லாமல் போனால் நான் ஒரு கெட்ட நாளில் குப்பை லாரியில் அடிப்பட்டு இறக்க நேரிடலாம். இயக்குனர் இவருக்கு வசனங்களே கொடுத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவரின் அந்த பெரிய இரண்டு கண்களே எக்கச்சக்கமாய் பேசுகின்றன. இவருடைய அந்த wonderful starring லுக் அனுஷ்காவிற்கு எல்லாம் அடித்து போட்டாலும் வராது.

குவாட்டர் கட்டிங் படத்தில் காமெடி வில்லனாய் வந்த ஜான்விஜய் அதிகம்  பயமுறுத்துகிறார். தமிழ் சினிமாவில் பெரிய வில்லனாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது.

இடைவேளை வரை படம் ஆங்கில படம் பார்க்கும் உணர்வை தருவதை உங்களால் தடுக்க முடியாது. நாயகன் இன்டர்வெல் period போய் கொண்டிருக்கும் போது கதையில் இண்டர்வெல் விடுவது, இயக்குனரின் கலை நயம்.

இடைவேளைக்கு பிறகு திரைக்கதை கொஞ்சம் நீண்டாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. உமா ரியாஸின் கேரக்டர் சுவாரஸ்யத்தோடு பார்வையாளர்களை கொஞ்சம் திகிலடைய வைக்கவே அமைக்கப் பட்டுள்ளது. நடுவில் கொஞ்ச நேரம் காணாமல் போய் விடுகிறார்.

படத்தின் இரண்டாம் பாதியும், கிளைமேக்சிலும் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் ஒரு முழு நிறைவான படமாய் இருந்திருக்கும். நிஜத்தில் கெட்டவர்கள் தப்பு செய்து விட்டு வாழ்வதை நாம் பொறுத்துக் கொண்டாலும், சினிமாவில் அவர்கள் கண்டிப்பாய் தண்டிக்கப் படவேண்டும் என்று விரும்புவோம். கடைசியில் நாயகன் அந்த ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வரும் போது இயேசு கிறிஸ்து சிலையை டாப் வியுவில் காண்பிப்பதன் மூலமாக இயக்குனர் எதோ சொல்ல வருகிறார்.

நமீதா டச்: மௌன குரு, செயல் பேசுகிறது.

ஒரு தேர்ந்த திரைக்கதையுள்ள படம் பார்க்கிறோம் என்கிற உணர்வை வெகுமாதங்களுக்கு பிறகு உணர முடிகிறது.

Disclaimer:  இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.2 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Disclaimer: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. வெறும் ஹிட்சுக்காக மட்டுமே நமீதாவின் பெயர் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.
///

hehe

sivaram said...

it is true review. i watched this movie yesterday.