Jun 17, 2011

God must not be Crazy (என் ட்ரெக்கிங் அனுபவம்)

ஜூன் மாதத்தில் இமயமலை பிரதேசத்தின் குழு மணாலியின் கிழக்கே அமைந்துள்ள கசோல்(Kasol) என்ற பகுதியில் பத்து நாள்  ட்ரெக்கிங் போயிருந்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்தது ஆச்சர்யமே. அது போல ஒரு அனுபவத்தை பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 

அங்கு இருந்த பத்து நாட்களில் பேஸ் கேம்ப்பை தவிர, மற்ற இடங்களில் செல்போன் நெட்வொர்க் அதிகம் கிடைக்கததால் எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக கழிக்க முடிந்தது. ஒரு சில நெட்வொர்க்குகள் மட்டுமே அங்கங்கு கிடைத்தது. அந்த நாட்களில் தமிழ் நாட்டை பற்றிய எந்த ஒரு செய்தியும் தெரியவில்லை.

ரஜினி இன்னும் உயிரோடு இருக்காரா?
கனிமொழியின் கதி என்ன ஆச்சு? ஜாமீன் கிடைத்ததா?
சினிமாகாரங்க யாருக்காவது பாராட்டு விழா எடுத்தாங்களா?
தமிழ் தாத்தா கருணா லூசுத்தனமாய் ஏதாவது அறிக்கை விட்டாரா?
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சொர்க்கபுரியா ஆகிடுச்சா?

இப்படி எதை பற்றியும் தெரியாமலே சுற்றி கொண்டிருந்தேன்.

என் முதல் விமானப் பயணமும் அதில் தான் அமைந்தது. ஜன்னல் ஓர இருக்கை வேறு. ஏர் இந்தியா பனி பெண்கள் பனியை போன்றே வெள்ளை வெள்ளையாய் அவ்வளவு அழகாய், கண்களுக்கு காண குளிர்ச்சியாய் இருக்கிறார்கள். இந்திய காலாச்சார உடையான சேலைதான் அவர்கள் டிரஸ் கோடு. ஜன்னலுக்கு வெளியே வெள்ளை மேகங்கள். உள்ளே வெள்ளை இடுப்பு. எனக்கு எதை பார்ப்பது என்ற மிக பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கு மேல் நான் விவரித்தால் நன்றாக இருக்காது.

http://www.yhaindia.org/ என்ற அமைப்பின் மூலமாகத்தான் இந்த ட்ரெக்கிங்கிற்கு சென்றோம் நானும் என் நண்பன் தமிழ் அரசனும். அரைகுறையாய் சில ஹிந்தி வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு சலோ(Chalo) என்று கிளம்பிவிட்டோம். ஆட்டோகாரன் முதல், எங்களிடம் பேசும் எவரிடமும் "ஹிந்தி நஹி மாலும்" என்று சொல்லிவிட்டு தான் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கே தயாராவோம். நாங்கள் டெல்லியில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப் படுவதற்கு காரணமான தமிழக அரசியல்வாதிகளும் அதே தலைநகரில் துன்பம் அனுபவித்து கொண்டிருந்தார்கள் வேறுவகையில்.
 காலையில் டெல்லியில் தரை இறங்கியவுடன், குதுப்மினாருக்கு சென்று கோபுரத்தை மல்லாக்கப் படுத்து ஒரு போட்டோவும், அடுத்து போய் செங்கோட்டைக்கு முன்னால் கம்பீரமாய் நின்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் எடுத்து கொண்டு அன்றைய சாயுங்காலம் கசோலுக்கு பஸ் பயணம் தயாரானோம். அடுத்தநாள் காலை பேருந்து கசோலை நெருங்க மழை லேசாய் தூறியது. பார்வதி ஆற்றின் கரை ஒட்டியே சாலை பயணம். இயற்கையின் அட்டகாசங்கள் அங்கிருந்தே ஆரம்பமானது. 

முதல் நாள்:
கசோலில் உள்ள YHAI Base Camp -க்கு வந்து சேர்ந்தோம். நான் பசி தாங்கமாட்டேன் என்று தெரிந்து உடனே கூப்பிட்டு நூடுல்ஸ் சாப்பிட கொடுத்தார்கள் கேம்ப் சமையல்காரர்கள். தெய்வங்கள் அவர்கள். முதல் நாள் நம் பெயரை மெடிக்கல் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு நாள் பயிற்சிகள். நான்காவது நாள் தான் ட்ரெக்கிங்-க்கு கிளம்ப முடியும்.

நாங்கள் தமிழில் பேசி கொண்டிருக்கும் போது, நீங்கள் தமிழா? என்று கேட்டு  என்று அறிமுகம் ஆனார்கள் இரண்டு தமிழர்கள். வரிஷ்டாவும், மகியும். அப்புறம் மொத்தமாய் பத்து தமிழர்கள் சேர்ந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுதும் நடைபெறும் SARPASS எனப்படும் இந்த ட்ரெக்கிங் ப்ரோக்ராமுக்கு, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு குழு வந்திறங்கும். ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாய் ஐம்பது பேர் இருக்கலாம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். என் இன்னொரு நண்பன் வரமுடியாததால் எங்கள் குழுவில் 49 பேர் மட்டுமே. முதல் நாள் பெயர் பதிவு செய்த உடன் உங்களுக்கு ஒரு கூடாரம்(Tent) ஒதுக்கி விடுவார்கள். ஒரு கூடாரத்தில் பத்து முதல் பனிரெண்டு பேர் வரை தங்க வைப்பார்கள். மாடிவீட்டு மகான்களும் வசதி பாராமல் இங்கு தான் தங்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதற்கு அப்புறம் ஷாப்பிங், சாப்பிட என்று நாய் மாதிரி எங்கு வேண்டுமானாலும் சுற்றி விட்டு சாயுங்காலம் திரும்பி விட வேண்டும். இந்த பகுதியில் வெளிநாட்டுகாரர்கள் அதிகமாய் சுற்றுகிறார்கள். குறிப்பாய் இஸ்ரேல்காரர்கள் இரண்டு மூன்று மாதங்கள் இருந்து குடித்து கும்மாளம் அடித்து பின்பு நாடு திரும்புகிறார்கள்.

சாயுங்கலாம் டீ நேரம் முடிந்தவுடன்,  இரவு விரித்து, போர்த்தி தூங்க கம்பளி போர்வை இரண்டும், மலை ஏறுவதற்கு உபயோக படுத்த ஒரு BAG ஒன்றும் கொடுப்பார்கள். அந்த கம்பளியின் எடை உங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் முழுமையாக தெரியும்.

இரவு டின்னர் முடிந்ததும், கேம்ப் பயர் நிகழ்ச்சி. அன்றைய தினம் SARPASS முடித்த குழு மெம்பர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள். பிறகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட தெரிந்தவர்கள் பாடலாம். டான்ஸ், மிமிக்க்ரி என்று எது உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் செய்யலாம். அங்கே "நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்று சொல்லிக்கொண்டு இரண்டு கேம்ப் லீடர்கள் இருக்கிறார்கள். நிறைய கண்டிசன் சொல்லி பயமுறுத்துவார்கள்.

நோ ஸ்மோகிங். 
நோ டிரிங்கிங். 
அப்புறம் பசங்க டெண்டுக்குள்ள  பொண்ணுங்க ஆரும் போககூடாது. பொண்ணுங்க டெண்டுக்குள்ள பசங்க ஆரும் போக கூடாது

என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி மிகவும் கண்டிப்புடன் சொன்னார் ஒருவர். முக்கிய விஷயமான சாப்பாட்டை பற்றி சொல்ல வேண்டும்.

  1. காலை எழுந்தவுடன் காபி வித் பிஸ்கட். 
  2. எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட். 
  3. மதியம் ஒரு மணிக்கு லஞ்ச். 
  4. சாயுங்காலம் ஐந்து மணிக்கு டீ வித் பிஸ்கட். 
  5. இரவு 7:30 க்கு டின்னர். 
  6. படுக்க போகும் முன் போன்விட்டா.
 சாப்பாட்டை சேர்த்து மொத்தமாய் பதினோரு நாளைக்கும் சேர்த்து அவர்கள் வாங்கும் கட்டணம் வெறும் மூவாயிரத்து இருநூறு மட்டுமே.

இந்த ட்ரிப் முடித்து வந்ததும் என் நண்பன் என்னிடம் கேட்டான்,

ஏன்டா? பசங்களையும் பொண்ணுங்களையும் அவங்க ஒரே டெண்டல தங்க வைக்கல?

நான்: "அப்புறம் டென்ட் உடைஞ்சு விழுந்துடும் கண்ணா!"

இரண்டாம் நாள்:

"அடடே! இந்த ட்ரிப் ரொம்ப ஜாலியா இருக்கே!" என்று சந்தோஷத்தில் தலையோடு இழுத்து போர்த்தி குப்புறப் படுத்து குறட்டை விட்டு தூங்கி விடாதிர்கள். அடுத்த நாள் காலை காபி குடித்தவுடன் உடற்பயிற்சி செய்யும் இடத்துக்கு ஓட விடுவார்கள். ஷு வைத்திருக்காத காரணத்தால் சிலரை YHAI உள்ளே உள்ள இடத்திலே மூன்று ரவுண்டு ஓட விட்டார்கள். ஓடி போனதிலே குளிர் எல்லாம் போய் வியர்வை வழிய ஆரம்பித்து விடும். கஷ்டப்படட்டு உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் கடைசியில் ஹா! ஹா! ஹா! என்று சத்தம் போட்டு அந்த வலியிலும் சிரிக்க வேறு சொல்வார்கள்.

எல்லாம் முடிந்து காலை சாப்பிட்டவுடன் அன்றைக்கு (பனி) போருக்கு, ஐ மீன் ட்ரெக்கிங் செல்லும் குழுவை வழியனுப்பி வைக்க வேண்டும். அடுத்து உங்களது இரண்டு மொத்த கம்பளி போர்வையை எடுத்து அவர்கள் கொடுத்த Bag இல் அடைத்து மாட்டி கொண்டு அருகில் உள்ள மலை பகுதியில் ஏற வேண்டும். இது உங்கள் எடையுள்ள பையை தூக்கி கொண்டு மலை மீது ஏறி நடக்க பழகும் ஒரு பயிற்சிதான்.

மூன்றாம் நாள்:

அடுத்த நாள் காலை உடற்பயிற்சி, உணவு எல்லாம் முடிந்த பின், பாறை ஏறுதல் பயிற்சி. இது பார்க்க நல்ல காமெடியான நிகழ்ச்சியும் கூட. உங்கள் இடுப்பில் கயிறை கட்டி விடுவார்கள். மறுமுனை பாறையின் மேலே உள்ள மரத்தில் கட்டி வைக்கப்படும். சின்ன சின்ன இடுக்குகளில் காலை வைத்து கஷ்டப்பட்டு ஏற வேண்டும். சில பேர் வெகு நேரம் பாறைகளை கட்டிபிடித்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். சிலர் மேலே இருக்கும் மரம் ஒடிந்து விடும் என்ற நல்ல எண்ணத்தில் ஏறாமலும் விட்டு விடுவார்கள்.

நான்காம் நாள்:

அன்றைக்கு நாம் ட்ரெக்கிங் செல்லவதற்கு மற்றவர்கள் கைதட்டி வழியனுப்பி வைப்பார்கள். மதிய உணவு லஞ்ச் பாக்ஸ்சில் போட்டு கொடுத்து விடுவார்கள்.


அன்றைக்கு ஆரம்பித்து ஆறு நாட்கள் ஆறு கேம்பிற்க்கும் மலைமலையாய் ஏறி இறங்க வேண்டும். ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஏழு கிலோமீட்டர்கள் முதல் பத்து கிலோமீட்டர்கள் வரை ஏறி இறங்கி நடக்க வேண்டும். ஒவ்வொன்றும் புதிது புதிதான அனுபவத்தை தந்தது. ஏழாவது நாள் பேஸ் கேம்பிற்கு வந்து விட வேண்டும்.

போகும் வழியில் எல்லாம் எம்ஜியார், இளையராஜா பாட்டிலிருந்து இன்றைய பாட்டு வரை எல்லா பாடல்களையும் பாடி கிழித்து காட்டாற்றில் ஓட விட்டோம். வெகு தூரம் நடந்து கால் வலிக்கும் போது "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" சரணம் பாடினோம். சாமியே சரணம் ஐயப்பா!

நடு நடுவே நமக்கென்று வாங்கி சாப்பிட கடைகள் போட்டிருப்பார்கள். டீ முதல் நூடுல்ஸ், ஆம்லேட், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் கிடைக்கும். விலையும் நீங்கள் ஏறி வந்த உயரத்தை போல அதிகமாகவே இருக்கும். உயரம் ஏற ஏற விலையும் நேர் விகித்தில் ஏறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இங்கே ஐந்து ருபாய் மேகி நூடுல்ஸ் விலை அங்கு 10, 20,30,40,50 வரை சென்றது.

அழகிய இடத்தில் அமைந்திருக்கும் பத்ரி கேம்பிற்கு சென்ற சில நிமிடத்தில் பனி கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி. அப்போதே எனக்கு அனுபவித்து போதும் வீட்டிக்கு செல்லலாம் என்ற மன நிறைவு வந்தது.


ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஒரு கேம்ப் லீடர் இருப்பார். ஒரு கேம்பை சென்றடைந்ததும், 
சாப்பாடு நேரம் என்ன?, 
குடிக்க தண்ணி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்?, 
புழங்குவதற்கு தண்ணி எங்கு பயன்படுத்த வேண்டும்? 
என பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் சொல்லிவிடுவார். 

அவற்றில் முக்கியமானது சாப்பிட்ட பின் செல்ல வேண்டிய இடம். எல்லாம் திறந்தவெளி பல்கலை கழகம் தான். இந்த நிலப்பரப்பு ஆண்களுக்கு, இந்த நிலப்பரப்பு பெண்களுக்கு என்று ஏரியா பிரித்து கொடுத்து விடுவார்கள். டாய்லெட் பேப்பர் நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம். டாய்லெட் பேப்பர் யூஸ் செய்வதா? இல்லை குளிர் தண்ணி யூஸ் செய்வதா? என்பது உங்கள் விருப்பம். பொதுவாக நீரோடை ஓரமாய் தான் கேம்ப் அமைந்திருக்கும். கை கழுவுவதற்கு குளிர் நீரை தொட்டால் விரல் எரியும். மக்கள் தண்ணியை வாட்டர் பாட்டிலில் பிடித்து கொண்டு அவ்வபோது காட்டுப் பகுதியில் மறைந்து விடுவர். பனிமலையில் அதற்கு போகும் போது ஒரு குழி தோண்டி அதில் காரியத்தை முடித்து மூடிவிட்டு வந்து விட வேண்டும். ஏற்கனவே மூடிய குழிகளை மிதிக்காமல் செல்வது உங்கள் சாமர்த்தியம்.நகாரு என்ற கேம்ப் தான் மிக உயரமான கேம்ப் (13,800 ft). பனிமலையில் அமைந்துள்ளது. இங்கு பனிக்குள் ஒரு பைப்பை செருகி சூரியன் மறையும் வரை உருகி வழியும் நீரை பிடித்து சேமிக்கிறார்கள். எந்த ஒரு கேம்பிலும் சாப்பாட்டுக்கு குறை ஏதும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சுறுசுறுப்பாகவும் வலிமையுடனும் ஏறுவதற்காக சத்தான உணவுகளை தருவார்கள். ரொட்டியுடன் உருளை கிழங்கு கூட்டு அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் தருகிறார்கள் என்று இஷ்டத்திற்கு உருளை கிழங்கை சாப்பிட்டால், அப்புறம் உங்களுக்கு வாயால் பிரச்னை இருக்காது. வாயை கட்டு படுத்த வேண்டும் அல்லது மற்றதை கட்டு படுத்த வேண்டும்.

பேஸ் கேம்ப்பை தவிர வேறு எந்த கேம்பிலும் மின்சாரம் கிடையாது. அதனால் மாலை சூரியன் மறைவதற்குள் டின்னர் முடித்தாக வேண்டும். நகாரு கேம்பில் இருந்து கிளம்பும் போது காலை 2:30 மணிக்கெல்லாம் எழுந்து, காலை உணவு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கு SARPASS எனப்படும் பனிமலைப் பகுதியை கடக்க வேண்டும். அதிகம் வெயில் வந்து விட்டால் பனி உருகி நடக்கையில் வழுக்க ஆரம்பித்து விடும். பனி மலையில் இருந்து கீழே இறங்கும் போது, படுக்க வைத்து தள்ளி விடுவார்கள். அப்படியே சறுக்கி கொண்டு கீழே வரலாம். அருமையான அனுபவம். என்ஜாய் பண்ணுவதற்கு இயற்கையை இவ்வளவு அழகாய் படைத்த இறைவன் கண்டிப்பாய் முட்டாளாய் இருக்க முடியாது.அங்கே உங்கள் சுமைகளை தூக்கி கொண்டு நடக்க சிரமப் பட்டால், போர்டர்கள்(Porter) இருக்கிறார்கள். எங்கள் குழுவில் மூன்று போர்டர் பெண்கள் வந்தார்கள்.அவர்கள் அனாயசமாக இரண்டு பைகளை(bags) தூக்கி கொண்டு ஏறுகிறார்கள். மேலே படத்தில் உள்ள இந்த பெண் ஒருமுறை என்னிடம் எதோ கேட்க, நான் "ஹிந்தி நஹி மாலும்"  என்று சொல்ல, அவள் வேண்டுமென்றே

"ஆப் கா நாம் கியா ஹே?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று பதில் சொன்னேன்.
நான் தப்பாய் பதில் சொல்லிவிட்டேனா என்று மறுபடியும் ஆங்கிலத்தில்
What is your name?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று மறுபடியும் சொன்னதை கேட்டு சிரித்து விட்டாள்.

பத்து நாட்களில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால், பத்து நாட்களுக்கு குளிக்க முடியவில்லை. குளிக்கவும் கூடாது.

ஆனால் இந்த காரணம் தான் என் நெருங்கிய நண்பன் முருகன் அடுத்த ஆண்டு SARPASS செல்லுவதற்கு ஆர்வமாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகைஅல்ல. பையன் சென்னையிலே அதிகம் குளிக்க மாட்டான்.

இதை தவிர எனக்கு இருந்த மிக பெரிய வருத்தம், ஒரு நல்ல SLR கேமராவும், எக்ஸ்ட்ரா பேட்டரிகளும் இல்லாததுதான்.

கடைசி நாள் திரும்பி வரும்போது மணிக்கரன் என்ற ஊரில் வரும் இயற்கை வெந்நீர் ஊற்றில் குளித்துவிட்டு, அருகில் உள்ள குருத்வார் சீக்கியர்கள் கோவிலில் இலவச சாப்பாடு கொடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.


எல்லாம் முடித்து சான்றிதல்கள் எல்லாம் வாங்கிவிட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். மெட்ரோ ரயில் மூலமாக ஏர்போர்ட் செல்ல, அங்குள்ள கஸ்டமர் கேர் பெண்மணியிடம் விவரம் கேட்டால், அவள் என்னுடைய காதலி போல ஹஸ்கி வாய்சில் பதில் சொன்னாள். மறுபடியும் புரியவில்லை என்று காதை  உள்ளே நுழைத்து கேட்டேன். மறுபடியும் ஒன்னும் புரியவில்லை. நான் டென்ஷன் ஆக வேண்டியதிற்கு பதிலாக அவள் டென்ஷன் ஆகி பேப்பரில் எழுதி கொடுத்தாள்.

ஒருவேளை நமக்கு தான் காது கேட்கவில்லையோ என்று "ஆர்குட்" என்ற நண்பனிடம் இதை சொன்னால், அவனும் அவள் மேல் மிக கோபத்தில்  இருந்தான். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி வாய்பேச தெரியாதவள் எல்லாம் எதுக்கு கஸ்டமர் கேரில் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.

அடுத்த நாள் காலை மீண்டும்,
அதே ஏர்இந்தியா விமானம்.
அதே வெள்ளை மேகங்கள்.
அதே மனக் குழப்பம்.


பின் குறிப்பு: 
அடுத்த வருடம் இந்த ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமென்ட்டில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.


18 comments:

தாமிரபரணி said...

/**
நாங்கள் டெல்லியில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்படுவதற்கு காரணமான தமிழக அரசியல்வாதிகளும் அதே தலைநகரில் துன்பம் அனுபவித்து

கொண்டிருந்தார்கள் வேறுவகையில்.
**/
உங்க பேச்சு சிறுபிள்ளைதனமாக உள்ளது.
சம்பந்தமில்லாத இரண்டு விசயங்களுக்கு முடிச்சு போடாதீர்கள்.
இந்தி தணிப்பு என்பது என்றுமே எதிர்க்க படவேண்டியது,
பெரியார், அண்ணா, கலைஞர் மட்டும் அல்ல அதை அனைவரும் எதிர்த்தார்கள், கலைஞர் இந்தியை எதிர்த்தார் என்பதற்காக அவர் செய்யும் தவறை

ஒத்துகொள்ள முடியாது, ஆனால் உங்கள் கருத்தை பார்த்தால் அவர் இந்தியை ஆதரித்திருந்தால் இன்று கலைஞரின் ஊழலை நியாயபடுத்துவிர்கள்

போல இருக்கு!!
எப்படி கன்னடம், மலையாளம், தெலுங்கோ அதுபோலதான் இந்தியும் மற்ற மாநிலத்தவர் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக நாம்
இந்தியை எற்க வேண்டும் என்ற எந்த காட்டாயமும் இல்லை ஒருகாலத்தில் இந்தி படித்தால் வேலை என்றுபோன்ற மாயயை இந்திய அரசாங்கம்

உருவாக்கியது அனால் வேடிக்கை என்னவென்றால் இந்தி பேசும் மாநிலத்தவர்கள்தான அதிகமாக பிற மாநிலத்து பிழப்பு தேடி அலைந்தார்கள்.
வடநாட்டவர்கள் எவனாவது இந்தி ஆங்கிலம் தவிர தமிழ் அல்லது பிற இந்திமொழியை படிக்கிறானா ஆனால் தமிழன் ஆங்கிலம் படித்தால்

சிலபேருக்கு பொருப்பதில்லை தமிழர்கள் ஆங்கிலம் படிப்பார்கள் ஆனால் இந்திய மொழியான இந்தியை படிக்கமாட்டார்கள் என மடத்தனமான ஒரு

பேச்சு ஏன் இதே வசனத்தை வடநாட்டில் சொல்ல வேண்டியதுதானே.
ஒவ்வொறு நாளும் எத்தனை வடநாட்டவர்கள் சென்னைக்கு பிழப்பு தேடி வருகிறார்கள் அவர்கள் எல்லாம் என்ன தமிழ் படித்துதான் வருகிறார்களா

என்ன?
இப்படி நாம் மட்டும் நினைப்பதால்தான் வடநாட்டு அரசியல்வாதிகூட இங்கு வந்து பரப்புரை செய்யமுடியுது,
அதுமட்டுமா தில்லி அரசாங்கம் நம் தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை அனுமதிப்பிதில்லை, மேலும் நடுவன அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளும் இந்தி, ஆங்கிலேத்திலேயே நடத்தபடுகின்றன சொந்த நாட்டில் நம் மொழியில் தேர்வுநடத்த, நீதிமன்றத்தில் வாதிட நாம் போராடவேண்டியதிருக்கு

வெள்ளகாரன் மற்றும் பல ஐரோப்பியர்கள் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் எல்லா மொழிகளை கற்று கொண்டுதான் சுற்றுகிறார்களா

என்ன

Katz said...

தாமிரபரணி சார், முதல்ல கைய கொடுங்க. இதுவரைக்கும் என்னை மதிச்சு, யாரும் இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டது இல்லை.

Katz said...

நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அது தான் முக்கியம். அதை விட்டு விட்டு மொழி, மதம் அப்படின்னு பாகுபாடு பார்க்கறது எனக்கு சரின்னு படல. வேறு நாட்டு மொழியான ஆங்கிலம் படிக்கலாம். ஆனால் இந்நாட்டு மொழியான ஹிந்தியை படிக்ககூடாது என்று சொல்கிறீர்கள். நான் சீரியஸாக எப்போதும் எழுதுவதில்லை. அடுத்து தனி பதிவாக இதைப் பற்றி எழுத வேண்டும்.

தாமிரபரணி said...

/*
மொழி, மதம் அப்படின்னு பாகுபாடு பார்க்கறது எனக்கு சரின்னு படல. வேறு நாட்டு மொழியான ஆங்கிலம் படிக்கலாம். ஆனால் இந்நாட்டு மொழியான ஹிந்தியை படிக்ககூடாது என்று சொல்கிறீர்கள்
*/
இப்பதான் மொழி ஒரு பொருட்டு அல்ல என்றீர்கள் அதற்குள் இது இந்நாட்டு மொழி வேறுநாட்டு மொழியன பாகுபாடு பலே நல்ல ஒரு முரண்பாடு.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தாங்கள் புரிந்துகொள்ளவில்லையா அல்லது நான் சரியாக சொல்லவில்லையா என்று தெரியவில்லை.

தமிழை தவிற நான் எந்த மொழியையும் தமிழர்கள் மேல் திணிக்க கூடாது என்பதே என் வாதம்,
இன்றைய அமெரிக்க இங்லிசின் வேர் யு.கே இங்கிலிசுதான், அதற்காக அவர்களை யு.கே இங்கிலிசுதான் படிக்க வேண்டும் என்று சொன்னால் எற்பார்களா, தமிழில் இருந்து பிரிந்து போன மொழிதான் மலையாளம், கன்னடம், தெலுங்கு அவர்களை தமிழ் படி என்று வற்புற்த்தினால் எற்பார்களா.

தாமிரபரணி said...

ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் படிக்கமால் தெரியாமல் தன் தாய்மொழியிலேயே படித்து சாதனை படித்தவர்கள் பலர் உள்ளார்கள்
எ-டு செர்மன், சப்பான், பிரஞ்ச், சீனா அரேபியர்கள்,உருசியா(ரஷ்யா) என பலபேரை சொல்லலாம்
காலனியாக இருந்த பலநாடுகள் தங்களின் மொழிபோக அடுத்தாக தங்களை ஆண்ட ஆதிக்க நாட்டின் மொழியை கொண்டிருக்கும்,
நம் தமிழகத்தை பொருத்தவரை நாம் ஆங்கிலத்தை உடனியாக ஒதுக்கிவிட முடியாது.
ஆங்கிலம் பல்வேறு துறையில் வளர்ந்து நிற்க்கும் ஒரு மொழி
விஞ்ஞானம், அறிவியல்,கணினி, தொலை தொடர்பு என பல துறையிலும் ஆங்கிலம் தேவைபடுகிறது, அதற்காக தமிழை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற அவல நிலை தேவையில்லை.

நம் அரசாங்கம் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஒன்றுகூடி திட்ட மிட்டு பாடுபட்டால் தமிழை முழுமையாக பயன்பாட்டில் கொண்டுவர முடியும்(இதை பற்றி நாம் பின்பு விரிவாக பார்ப்போம்).
நம் வாழ்வில் பலநாள் ஆங்கிலம் எப்படி பேசுவது, வெள்ளகாரன் எப்படி பேசுகிறான் என்பதிலேயே நம் நேரத்தை விரயமாக கழித்து கொண்டிருக்கிறோம் பிறகு எப்படி நாம் எப்ப முன்னேறுவது.

தாமிரபரணி said...

இந்தியாவையும், தமிழையும் இங்கு நம்மில் பலபேர் போட்டு குழப்பிகொள்கிறோம்,
இந்தியா என்பது தோராயாமாக ஒரு 100வருடத்துக்கு முன்பு உண்டான ஒரு உறவு
ஆனால் நம் தமிழ் மொழி பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே உண்டான உறவு
இந்தியா என்பது பலமொழிகளால் ஆன ஒரு கலவை அதில் இந்திக்காக மற்றவர்கள் விட்டுகொடுக்க வேண்டும் என்று சொல்வது மடத்தனம் ஆகும் இந்திமொழி எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத, இலக்கணவளம் இல்லாத ஒரு தற்குறி மொழி இது எப்படி தமிழ்மொழிக்கு ஒப்பாகும்
இப்படி இந்தியை அனைத்து மொழியின் திணிப்பதால் அதீத பயன் அடைவது இந்தி மக்கள்தான் அவர்கள் முதல் குடிமகனாகவும் மற்றவர்கள் இரண்டாவது குடிமகனாகவும் மாறிவிடுவார்கள் அப்படிதான் இப்பொழுது ஆகிவிட்டது இதற்க்கு நிறைய எ-டு சொல்லலாம்(இதன் பற்றிய முழு அலசலை பிறகு பார்ப்போம்)
1. பெங்களுரில் உள்ளுர்காரர்கள் இரண்டு பேர்கள் செல்பேசி கடையில் எதோ கன்னடத்தில் கேட்டு வைக்க
அந்த கடைகாரன் கோபமாக ஏய் இந்தியில் பேசுனு சொல்ல, என்ன இறுமாப்பு இருக்க வேண்டும்,
எந்த மாநிலத்துக்கு போனாலும் அந்த மாநிலத்து மொழியை படிக்க முயல்வதே கிடையாது,
அந்த வகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று சொல்லலாம் ஏதோ ஒரு வகையில் அவன் தமிழை தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தி மக்களுக்கு மற்றவர்கள்தான் தன்மொழியை கற்றுவைத்திருக்கவேண்டும் தெரிந்திருக்க வேண்டும்
என்ற எண்ணம், இது எவ்வாறு வருகிறது இந்த பாழாய் போன இந்திய அரசியல்அமைப்புதான் காரணம், இந்தி மொழியை அனைத்து மாநிலத்திலும் திணித்து இந்தியை ஒரு அத்தியாவாச மொழியாக மாற்ற முயற்சிக்கிறது, பல மொழிகள் வாழும் ஒரு நாட்டில் இந்தி மொழியை மட்டும் முதன்மைபடுத்துவது அப்பத்தமாகும் அப்படியே அதை பரப்புவதாக இருந்தால் இந்தி மக்களின் வரிபணத்தில் இருந்து செய்ய வேண்டியதானே.

தாமிரபரணி said...

அப்பறம் உங்க கருத்தை பார்த்தா ஒன்று ரொம்ப வெள்ளந்தியாய் இருக்க வேண்டும் இல்லை
உங்களுக்கு தமிழ் மிது பெரிய நம்பிக்கையோ பற்றோ இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்தியா விடுதலை அடைகின்ற நேரத்தில் நாட்டின் மொழியாக எது இருக்க வேண்டும் என்ற விவாதம் எழுகிறது அப்பொழுது இந்தி என்று வடநாட்டவர்களும், உருது என்று இசுலாமியர்களும் அடித்துகொண்டிருக்கிறார்கள்
தெற்கே தமிழ் மற்றும் பல திராவிட மொழிகள் உள்ளதே என்ற அக்கரை ஒரு துளிகூட இல்லை
அது சரி நம்மவர்களை ஆடு, மாடு, காக்க போன்று நினைத்திருக்க கூடும் போல, உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் வடஇந்தியாவில் இந்தியை பொதுவாகவும், திராவிட மொழிகளின் தாயகமான தமிழை தென் இந்தியாவின் பொதுவாக வைத்திருந்தால் சால சிறந்ததாக இருந்திருக்கும்

ஆகா என்ன ஒரு குடிஉரிமை.
தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதிட தடை ஆனால் வடநாட்டில் மட்டும் அவர்கள் தாய்மொழியான இந்தியில் வாதிடலாம்.
நடுவன தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் இந்தியில் மட்டுமே,
அப்ப தமிழன் என்ன அனாதைகளா.ஏன் தமிழ்மொழியில் நடத்தினால் என்னவாம்.
இந்திய பாராளுமன்றம், தேசிய வங்கிகளில், ஆயில் துறைகளில், இரெயில்வே துறையில், இரெயில்வே நிலைங்களில்,
விமான துறையில், விமான நிலைங்களில், கடவுச்சீட்டு(Passport), நிர‌ந்த‌க் க‌ண‌க்கட்டை(PAN card)
என அனைத்திலும் இந்தியும் ஆங்கிலமுமே முதன்மையாக செயல்படுகிறது

தேசிய அலைவரிசைகள் என சொல்லிகொள்ளும் என.டி.டி.வி, ஐ.பி.என், டைம்சு நவ் ... என எதுவும் தமிழ் படங்கள் பற்றி அலசுவது இல்லை ஆங்கில படங்கள்கூட விமர்சிப்பார்கள் ஆனால் மருந்துக்குகூட தமிழ் படத்தை பற்றி விமர்சிப்பதில்லை, எதையாவது விமர்சனம் செய்ய அது அங்கே புகழ் அடைந்துவிட்டால் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் சினிமா அங்கு பரவினால் பொருக்குமா அவர்களுக்கு.

தேசியம் என்றாலே இந்தியுடன் தமிழும் அடக்கம்தானே,
தமிழ் இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், இசை அமைப்பாளர்கள், நடிகர்கள் என எந்த விதத்திலும் இந்திகாரனுங்களுடன் குறைந்தவர்கள் அல்ல, அதையும் மீறி தமிழ் சினிமாவை அவர்கள் விமர்சிக்க, அலச மறுக்கிறார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இருக்கிறது

Katz said...

நீங்கள் வயதில் மூத்தவராய் இருக்ககூடும். உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கிறது. எனக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம். சிறுபிள்ளைதான் நான்.

ஆனால் இன்றைய படித்த தலைமுறையினர் பெரும் பான்மையினோர் வன்மத்தை வைத்துக் கொண்டு ஹிந்தியை பார்ப்பதில்லை. நீங்கள் சொல்வது போல் மெட்ரிகுலேசன் வகுப்பில் படிக்கும் சிறு குழந்தையிடம் கூட தமிழுக்கு எதிரான வரலாறை எடுத்து சொல்லி ஹிந்தியை படிக்ககூடாது என்று சொல்ல வேண்டுமோ?. ஹிந்தி தெரியவில்லை என்றால் தமிழ் நாட்டிற்க்குள் மட்டும் தான் சுற்றிகொண்டிருக்க வேண்டும். அதை விட்டால் டைரக்ட் பிளைட் பிடித்து நியுயார்க் தான் போக வேண்டும் என்கிறீர்கள். டெல்லி போய்க் கூட நியுயார்க் போக கூடாது?

நாம் தான் இப்படி அடித்து கொள்கிறோம். ஆனால் பகுத்தறிவு, திராவிடம் என்று பேசும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் எல்லா மொழியையும் தான் படிக்கிறார்கள். அவர்கள் அரசியலுக்காக நம்மைத்தான் பகடை காய்களாய் உபயோகிகிறார்கள். மொழிப் பிரச்சனையும், சாதி, மத பிரச்சனையும் அரசியல் செய்ய உதவும் கருவிகள் அவ்வளவே!

ஆரண்ய காண்டத்தில் சொல்வது போல, ஒருவனுக்கு எது தேவையோ அது தர்மம்.

அமுதா கிருஷ்ணா said...

என் மகன் இந்த வாரம் ஹிமாலயாவில் ட்ரெக்கிங் போய் உள்ளான்.ஒரு முக்கிய விஷயம் அவன் கேந்திரிய வித்யாலாவில் படித்ததால் ஹிந்தி அச்சா மாலும்,நான் தமிழ் சொல்லி கொடுத்தேன்.ஹிந்தி தெரியாமல் சென்னை தாண்டினால் திண்டாட்டம் தான்.ஒரு மொழியினை கற்று கொள்ள கூடாது என்று சொன்ன அரசியல்வாதிகள், அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு தனி டியூஷன் வைத்து செலவு செய்து கற்று தருவார்கள். ஹிந்தி பேச கற்று கொள்ள வேண்டும் என்றே அந்த ஸ்கூலில் என் மகனை சேர்த்தேன்.

ராஜ நடராஜன் said...

நானும் கூட குளுமணாலி போக வேண்டிய ஆளுதான்:)விமானத்திலிருந்து பாராசூட்ல குதிக்கிறதுக்குப் பயந்துகிட்டு சேலம் கேம்ப்ல ட்ரெக்கிங்க் கனவெல்லாம் முடிஞ்சு போச்சு.

அப்ப எனக்கும் கூட இந்தி நஹி மாலும்தான்.நியாயமா நாந்தான் அல்லக்கை.ஆனால் வலது கைப்பக்கம் ஒரு பெங்காலி,இடது கைப்பக்கம் ஒரு மலையாளி தோழர்கள் இருந்ததால் மொழி விசயத்துல மட்டும் நாந்தான் தாதா:)

கேம்ப் நினைவுகள் இப்ப நினைச்சா சிரிப்பையும் வரவழைக்குது:)

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டம் பக்கம் வந்தா தாமிரபரணி சூட்டைக்கிளப்புறாரு போல தெரியுதே:)

இந்திப் போராட்ட காலத்துல உருவான இந்தி எதிர்ப்பு போராட்டம் நியாயமானதே.ஆனால் எல்லோரையும் இந்தி படிக்க வேண்டாமென்று தன் பிள்ளைகளை வித்யாலாயக்களில் படிக்க வைத்த இரட்டை நிலை கண்டிக்கத் தக்கது.நாம் இன்னும் மத்திய அரசின் நிர்வாகத்துறைக்குள் நுழைவதற்கு சாத்தியங்கள் இல்லாமல் போனதில் இந்தி கற்றுக்கொள்ளாமையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.இல்லாவிட்டால் மேனனும் நிருபமா ராவும் இடும் கட்டளைகளுக்கு தமிழர்கள் செவி சாய்க்க வேண்டிய அவசியங்கள் இருந்திருக்காது.

தமிழ் மொழியின் தனிச் சிறப்பாய் செம்மொழி மாநாடு குடும்ப மாநாடாய் மாறிப்போனதெல்லாம் நினைத்தால் அயர்ச்சியே தோன்றுகிறது.

தமிழ் கட்டாயப்பாடம்.ஆங்கிலம் இரண்டாம் பாடம்.தேவையென்றால் மட்டுமே இந்திக்கு மூன்றாம் நிலையென்று கற்பதற்கான கால நேரமிது.

Katz said...

நன்றி ராஜ நடராஜன். சேலத்துல எங்கே ட்ரெக்கிங் போனிங்க? நானும் சேலம் மாவட்டம் தான்.

தாமிர பரணி சார், அடிக்கிற வெயிலுக்கு தெரியாம என் ப்ளாக் பக்கம் ஒதுங்கிட்டாருன்னு நினைக்கிறேன். நான் எனக்கு தெரிஞ்சு எதோ மொக்கையாக எழுதி கொண்டு உள்ளேன்.

அதிலும் இந்த பதிவில் ஹிந்தி பற்றி அவ்வளவாய் ஏதும் எழுத வில்லை. இந்த பதிவுக்கு இவ்வளவு சீரியஸாக கமென்ட் வரும் என்று கனவிலும் நினைக்க வில்லை.

"ஹிந்தி எதிர்ப்பு கண்கட்டிவித்தை" என்று தலைப்பிட்டு ஒரு பதிவு போடலாமா? என்று யோசித்து வருகிறேன். ஹீ! ஹீ!

நம் அரசியல்வாதிகள் தமிழ் வளர்ப்பதை போல் நடத்தும் நாடகம், தமிழ் தொலைகாட்சி சீரியலுக்கு ஒப்பானது.

ஒரு நாட்டின் மக்களை இணைக்கும் பாலமாக எதோ ஒன்று இருக்க வேண்டும். மொழி என்பதே அதற்கு சரியாக இருக்கும்.

வடநாட்டில் ஹிந்தி தெரியாமல், ஒரு அவசரத்திற்கு கழிப்பிடம் எங்கு இருக்கு? என்று கேட்பதற்கு கூட கஷ்டப்பட வேண்டி உள்ளது. அதை அடக்குவதே ஒரு கஷ்டம். அதில் இது வேறு. டெல்லி போன்ற தலைநகரத்திலே இந்த கதி என்றால் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இன்னும் சிரமம் தான்.

தாமிரபரணி said...

/*தமிழுக்கு எதிரான வரலாறை எடுத்து சொல்லி ஹிந்தியை படிக்ககூடாது என்று சொல்ல வேண்டுமோ */
எதற்காக ஆங்கிலேயருக்கு எதிரான வரலாற்றை எடுத்து சொல்லி நாம் விடுதலையை கொண்டாட வேண்டும்

/* ஹிந்தி தெரியவில்லை என்றால் தமிழ் நாட்டிற்க்குள் மட்டும் தான் சுற்றிகொண்டிருக்க வேண்டும்
வடநாட்டில் ஹிந்தி தெரியாமல், ஒரு அவசரத்திற்கு கழிப்பிடம் எங்கு இருக்கு? என்று கேட்பதற்கு கூட கஷ்டப்பட வேண்டி உள்ளது*/
தங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது,
நிங்கள் இவ்வளவு பெரிய கோழையாக இருப்பிர்கள் என நினைத்திருக்கவில்லை, மேலும் இது
வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவனின் பேச்சு
தன்னநம்பிக்கை இல்லாதவன் தமிழ்நாட்டில்கூட வாழமுடியாது.
BTW,
நான் கொல்கத்தா, ஒரிசா, தில்லி, குஜாராத், மும்பை, பெங்களுர் என அனைத்து மாநிலத்துக்கும் சென்று வந்துள்ளேன்,
எனக்கு தெரியாது அதற்காக நான் கஷ்ட்டபட்டதும் இல்லை வருத்தபட்டதும் இல்லை ஒருகாலத்தில் நான் திராவிட கட்சியை விமர்சித்தவன்தான் பின்பு தெளிவுபெற்றேன், இவ்வளவு ஏன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று உறுதியாக நம்பினேன் பின்பு தமிழ், இந்திய வரலாற்றை அலசியபோது இந்தி தேசிய மொழி இல்ல என்ற உண்மை அறிந்தேன்

இந்தி தெரியாத எத்தனையோ ஊர்கள் உள்ளன இதை என்னால் உறுதியாக சொல்லமுடியும்,
நம் ஊர் மக்கள் தமிழ் நாட்டை தவிர அனைத்திலும் இந்திதான் பேசபடுகிறது என்று நினைப்பதுபோல
அனைத்து மாநிலத்து மக்களிடமும் இப்படி ஒரு பிம்மத்தை இந்திய அரசாங்கம் எறப்படுத்தியுள்ளது.

திரும்பவும் சொல்கிறேன் ஆங்கிலேயின், டச்சுகாரர்கள், பிரஞ்சுகாரர்கள் பல நாட்டில் வணிகம் செய்துள்ளார்கள் இன்றும் பல ஊர்க்கு சுற்றுலா சென்று வருகிறார்கள், அவரகளுக்கு மொழி என்பது ஒரு தடையாக இருந்ததே இல்லை.
இவ்வளவு ஏன் அண்ணாதுரை, பெரியார் போன்றோர் பல வெளிமாநிலத்துக்கு சென்றிருக்கிறார்கள் அவர்களுக்கும் மொழி என்பது ஒரு தடையாக இருந்ததில்லை

/*ஆரண்ய காண்டத்தில் சொல்வது போல, ஒருவனுக்கு எது தேவையோ அது தர்மம்.*/
படங்கள் பார்பதில் தவறு இல்லை அதில் எது நல்லது கெட்டது என்கின்ற தெளிவு இருக்க வேண்டும்
ஒருவனுக்கு எது தேவையோ அது தர்மம் இதில் சின்ன திருத்தம்
தேவை பொருத்துதான் தருமம் மேலும் அந்த தேவை அடுத்தவரை பாதிக்கும் என்றால் அது தர்ம்மாக இருக்க முடியாது
அப்பறம் தர்ம்ம அடியாகதான் இருக்கும்

தாமிரபரணி said...

@ராஜ நடராஜன்
அவர்களுக்கு வணக்கம்
நமக்குள் விட்டுகொடுக்க ஆயிரம் விவாதங்கள் இருக்கலாம், ஆனால் சில அடிப்படை உரிமையை என்றுமே விட்டுகொடுக்க முடியாது.
எ-டு இந்தி படித்தால்தான் இந்திய அரசியலில் இடம் என்றால் அதை எதிர்த்தே ஆக வேண்டும், அப்ப என் தாய்மொழி தமிழ் என் தாய்நாடு இந்தியா என்றுசொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

என்னமோ இந்திய அரசங்கம் தமிழர்களிடம் இருந்து வரிபணமே வாங்காத மாதிரியும், தமிழ்களுக்கு அவர்கள் மாதம் மாதம் படி அளப்பது போல் இருக்கிறது தங்களின் வாதம், இந்தி தெரியாது என்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து வரிபணம் வாங்காமல் இருக்கிறார்களா என்ன
தமிழனோட வரிபணம் வேண்டும் ஆனால் தமிழனுக்கு இந்திய அரசியலில் மட்டும் உரிமை கிடையாது, வேண்டுமானால் ஆயிரத்து எட்டு தடைகள்

அப்பறம் கலைஞர் எமாத்திடார்னு இங்கு பலபேர் ஒப்பாரி வைக்கிறதை பார்க்க முடிகிறது,
கலைஞரின் மகன்களான ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ இந்தி தெரியாது. தன் தொழில் நிமித்தமாக கலாநிதி மாறனோ தயாநிதி மாறனோ இந்தி தெரிந்து வைத்திப்பதில் என்ன குற்றம் இருக்க முடியும், இதில் கலைஞர்மேல் என்ன குற்றம் இருக்க முடியும்,
இது பார்பனர்கள் திட்டமிட்டு பரப்பி விட்ட செய்தி.
அப்படியே ஒருவன் தமிழுக்கு துரோகம் விழைவித்தால் அதற்காக அவனை தண்டிக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து நானும் தமிழுக்கு துரோகம் விழைவிப்பேன் என்பது மடமையாகும்

இதுபோல் எத்தனையோ வெளிமாநிலத்து தொழில் அதிபர்கள், வியாபாரிகள், சினிமா நடிகர்கள் தமிழ் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அதற்க்காக அந்த மாநிலத்து மக்கள் எல்லாரும் இவர்கள் எல்லோரும் தமிழ் நன்கு தெரிந்துவைத்துள்ளார்கள் எங்களுக்கும் தமிழ் கற்றுதர வேண்டும் என்று சண்டைபோட்டு கொண்டிருக்கிறார்களா.

தாமிரபரணி said...

அப்பறம் கலைஞர் எமாத்திடார்னு இங்கு பலபேர் ஒப்பாரி வைக்கிறார்கள், கொக்கறிக்கிறார்கள்
ஆயிரம் ஆயிரம் வருடமா தமிழர்கள் இங்கு வாழ்ந்து வந்தவர்கள்
ஆனால் விடுதலை கிடைத்தவுடன் எங்கிருந்தோ வந்த ஆரிய கூட்டங்கள் தமிழர்கள் மேல் இந்தியை வலுகட்டாயமாக திணிக்க எத்தணித்தது அதை மறுத்து போராடிய தமிழக மக்களை ஈவு இரக்கமின்றி பல நூறு பேரை கொன்றது, இது வெள்ளகாரன் செய்த கொடுமையைவிட மிக கொடியது.

இந்திய அரசியல் அமைப்பு என்றுமே தமிழக மக்களுக்கு உண்மையாக இருந்ததில்லை,
இன்றும் இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை நாயை சுடுகிற மாதிரி சுடுகிறது ஆனால் ஈன இந்திய அரசாங்கம் கண்டுகொள்வதே இல்லை (விட்டா இதுக்கும்கூட இந்தி கற்காததால்தான் இந்தியா கண்டுகொள்ளவில்லை என்று சொல்வார்கள்போல),
இலங்கை தமிழர்கள் அங்கு கொத்து கொத்தாய் இலங்கை படையால் அழிக்கபட்டபோது
அதைபற்றி கொஞ்சமும் கவலைபடாமல் மேலும் அவர்களை கொன்று குவிக்க பண உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு.
இப்படியாக இந்தியா செய்த துரோக பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம்,
ஆனால் இந்தியா மீது யார்க்கும் வெறுப்பு வருவதில்லை இதுற்க்கு காரணம்
இந்தியா என்ற முலைசலவை அனைவரின் மனதிலும் பதிந்துள்ளதுதான்

அதுசரி சாகும் தமிழ் மீனவனுக்கும் நம்கும் என்ன உறவு நாம் ஏன் ஆழவேண்டும் நாம் ஏன் இவன்களுக்காக போராட வேண்டும், இலங்கை தமிழர்கள் செத்தால் நமக்கு என்ன அவர்கள் என்ன நம் உறவுகளா இல்லை நம் சாதிகாரர்களா!!!

Katz said...

தாமிர பரணி அய்யா, நானும் உங்கள் கருத்துகளை ஏற்று கொள்ள போவதில்லை. நீங்களும் என் கருத்துகளை ஏற்றுகொள்ள போவதில்லை எனும் போது இந்த வாக்குவாதம் ஒரு முடிவுக்கு வராது.

இருந்தாலும்.

எனக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், மற்ற இத்யாதிகளை பற்றி முழுமையான, முறையான தெளிவு இல்லை. ஆனால் நான் ஹிந்தியில் இலக்கியம் எழுத விரும்பவில்லை. என் அன்றாட நிகழ்வை சிரமம் இல்லாமல் கவனிக்க அந்த மொழி அறிய வேண்டும் அவ்வளவுதான்.

நீங்கள் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுகொள்ள வில்லை. ஆனால் இந்தியாவை தேசமாக ஏற்றுக் கொள்கிறீர்களா?

வடநாட்டில் ஹிந்தி தெரியாமல் எப்படி சமாளித்தீர்கள்? அந்த முறை எளிதாக இருந்தால் நான் பின்பற்ற தயங்க மாட்டேன். இதுவே நான் இலங்கை சென்றிருந்து அந்நாட்டின் மொழி தெரியாமல் இருந்து, எவனாவது ஏன்டா? உனக்கு என் மொழி தெரியாதா? என்று கேட்டிருந்தால் "உன் மொழி நான் ஏன்டா தெரிஞ்சிக்கொனும் வெண்ணை" என்று கேட்டிருப்பேன். ஆனால் இந்நாட்டில் இருந்து கொண்டு என்னால் அங்கு அப்படி பேசமுடியாது. அதற்கு தமிழ் நாடு தனி நாடாய் இருக்க வேண்டும். தமிநாட்டில் உள்ள எனக்கே ஹிந்தி எதிர்ப்புக்கான முறையான பதில்கள் இல்லை. அப்படி இருக்க வடநாட்டில் உள்ள மக்களுக்கு நாம் ஏன் ஹிந்தியை கற்க வில்லை என்ற அறிவு சுத்தமாய் இருக்காது.

இங்கு தன்னம்பிக்கை, கோழை போன்ற பேச்சுக்கு இடமில்லை. ஊமை கூட வடநாட்டில் என்ன எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைக்க முடியும். ஆனால் எவ்வளவு எளிதாய் என்பது தான் கேள்வி.

ஒரு நாட்டிற்க்கும் அந்நாட்டில் உள்ள ஒரு மாநிலத்திற்கும் ஒரு மொழியே தடையாய் இருக்கும் போது, கண்டிப்பாய், மற்ற நிறைய விஷயங்கள் தடையாய் இருக்கும் என்பதே உண்மை.

Katz said...

கலைஞரை பற்றி பேசாதிர்கள். அதே போல ஸ்டாலினையும் அழகிரியையும் மேற்கோள் காட்டாதிர்கள். அழகிரிக்கு ஆங்கிலமே தெரியாது. கலைஞரின் பேரன் தலைமுறையினரை பற்றி மட்டும் பேசுங்கள். அப்படி ஹிந்தி தெரியாத பேரன் இருந்தான் என்றால் அவனுக்கு படிப்பே அலர்ஜியாய் இருந்து பாட்டன் சொத்தை மட்டும் கோட்டை விடாமல் தமிழ் நாட்டுக்குள்ளேயே பொழப்பை ஓட்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும்.


//தன் தொழில் நிமித்தமாக கலாநிதி மாறனோ தயாநிதி மாறனோ இந்தி தெரிந்து வைத்திப்பதில் என்ன குற்றம் இருக்க முடியும். இதுபோல் எத்தனையோ வெளிமாநிலத்து தொழில் அதிபர்கள், வியாபாரிகள், சினிமா நடிகர்கள் தமிழ் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அதற்க்காக அந்த மாநிலத்து மக்கள் எல்லாரும் இவர்கள் எல்லோரும் தமிழ் நன்கு தெரிந்துவைத்துள்ளார்கள் எங்களுக்கும் தமிழ் கற்றுதர வேண்டும் என்று சண்டைபோட்டு கொண்டிருக்கிறார்களா.//

அரசியல்வாதிகளையும், சினிமா, தொழிலதிபர்களையும் இந்த விசயத்தில் சமமாய் பாவிக்கிறீர்கள் என்றால், அரசியல்வாதிகள் மொழியை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்பது இதிலிருந்தே புலனாகிறது.

Katz said...

இந்தியா தமிழர்கள், மீனவர்கள், இலங்கை தமிழர்கள் விசயத்தில் பாகுபாடோடு நடந்து கொள்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நாம் இதை பற்றி பேசிக்கொண்டிருக்க வில்லை. ஆனால் நீங்கள் கலைஞர் அனுதாபி என்பது மட்டும் அப்பட்டமாய் தெரிகிறது. கண்டிப்பாக தி.மு.க அனுதாபி இல்லை.

நீங்கள் கோழை, தன்னம்பிக்கை இல்லாதவன் என்று தேவை இல்லாமல் தாக்கியே வாக்குவாதம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன்.

சார், நான் ஒரு காமெடி பீசு. என்னை வுட்ருங்க.